தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் இல்லை.. ஆணவத்துடன் செயல்பட கூடாது - சென்னை ஐகோர்ட் காட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தங்களை கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறியும் நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:"தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சுட்டி காட்டிய நீதிபதி, மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என தெரிவித்த நீதிபதி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்துப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுவதாகவும், சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை எனக் கூறினார்.

இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும் எனவும், கோவிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும் என்றும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் அக் 21ம் தேதி (திங்கட்கிழமை) ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details