சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் பஞ்சாயத்தை யானைகள் வழித்தடமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோல் உதகை உள்ளிட்ட பல பகுதிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் வழக்கு தொடர முடிவு செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் விடுதிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சோலூர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளின் குறைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, சோலூர் யானைகள் வழித்தடத்தில் 1991ஆம் ஆண்டுக்கு பின், அங்கே நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என்று கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என தனியார் விடுதிகளுக்கு உத்தரவிட்டது. அவ்வாறு அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகமே கட்டிடங்களை இடித்து நிலத்தை கையகப்படுத்தும் என அறிவித்தது.
நீலகிரி யானை வழித்தட ஆகிரமிப்பு வழக்கு (Credits - ETV Bharat Tamilnadu) மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று (பிப் 05) விசாரணைக்கு வந்தது. மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சோலூர் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவை அரசு ஏன் அமல்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து! - MADRAS HIGH COURT
அதற்கு அரசு தரப்பில், பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும், சிறப்புக் குழு அறிக்கையின் கீழ் பஞ்சாயத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள் பிப் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ஆம் தேதி ஒத்திவைத்தனர்.