சென்னை:அதிமுகவை சேர்ந்த 5 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான குற்ற வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தைச் சட்டவிரோதமாகக் கூடிய குற்றமாகக் கருத முடியாது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்