சென்னை: தமிழக பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்த 7 வழக்குகள் பதியப்பட்டது. அதையடுத்து, மே 12ஆம் தேதி சவுக்கு சங்கரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
ஆனால், அதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த இரு நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதாவது, நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி உத்தரவில், அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காகப் பொறுப்பு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜி.ஜெயச்சந்திரன், என்ன காரணத்திற்காகச் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்.