சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற விக்னேஷ்வரன் என்பவர், சான்று சரிபார்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷினஅ மின்னஞ்சலுக்கும், அவரது மொபைல் எண் வாட்ஸ் ஆப்-க்கும் கடிதம் ஒன்றை மனுதாரர் விக்னேஷ்வரன் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:விபரீதமான சிறுவர்கள் சண்டை.. மகனை அடித்த மாணவரை கொடூரமாக தாக்கிய தம்பதி.. நெல்லையில் பரபரப்பு!
இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு நீதிபதி பட்டியலிட்டிருந்த நிலையில், விக்னேஷ்வரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கும் கடிதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது குறித்து மனுதாரர் தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை எனவும், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தனக்கு நேரடியாக கடிதம் எழுதியது நீதி பரிபாலனத்தில் தலையிடுவதைப் போல உள்ளதாகக் கூறிய நீதிபதி, நம்பிக்கை இழந்த நிலையில் மனுதாரர் இதுபோல கடிதம் எழுதியிருக்க கூடும் என்பதால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
அதேசமயம், வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.