தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் எவரும் இருந்தார்களா? - காவல்துறை விளக்கமளிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: பிரதமர் மோடியின் கோவை நிகழ்ச்சிக்குப் பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாகப் பெற்றோர்கள் புகார் அளித்தார்களா? பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்கள் எவரும் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படிப் பொருந்தும் என விளக்கமளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
Madras High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 9:25 PM IST

சென்னை: கோவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களைச் சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராகச் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று(ஏப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் நிகழ்ச்சி காரணமாக மாணவர்களை அழைத்துச் செல்லும் படி பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், பெற்றோரால் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்குச் சென்றதாகவும், அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் தலைமை ஆசிரியை தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு அரசு வழக்கறிஞர் K.M.D.முகிலன், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின் புகார் அளிக்கப்பட்டதாகவும், பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றிருந்ததாகவும் பதிலளித்தார்.

மேலும், அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை எனவும், ஆனால் அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்தது, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

பின்னர் நீதிபதி, பிரதமர் நிகழ்ச்சிக்குப் பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடர்பாகப் பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்தார்களா? நிகழ்ச்சியிலிருந்த போது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் என விளக்கமளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி பிற்பகலுக்குத் தள்ளிவைத்தார்.

அப்போது, பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பள்ளி நிர்வாகம் மீது மறு உத்தரவு வரும் வரை கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details