சென்னை:வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, நகரமைப்பு துறை இயக்குநர், வேளாண்துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றுகளைப் பெறுவதற்கு முன், விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக, நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளதால், பெருவெளி நிலத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.
இதையும் படிங்க;வடலூர் வள்ளலார் மையம்; நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கெடு!
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் நேற்று (டிச.05) வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அறநிலையைத் துறை தரப்பில், பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக வேளாண்துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அனுமதியை நகரமைப்பு திட்ட இயக்குநர் ரத்து செய்து புதிய அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட நகரமைப்புத்துறை உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த அனுமதிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காலாவதி ஆகிவிட்டதாக கூறிக் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்திய நீதிபதிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.