தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனரா? - விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு! - MADRAS HIGH COURT

சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனரா? என விசாரணை நடத்த உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 4:52 PM IST

சென்னை:புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒரு அறையில் 60 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் 203 வார்டன் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் 60 பேர் ஒரு ஷிப்ட்க்கு பணியில் இருக்க வேண்டுமென விதி உள்ள நிலையில் 15 வார்டன்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் சிறைத்துறை டிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீருடைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என பலமுறை உத்தரவிட்டும் அந்த நடைமுறை தொடர்வதாகவும், இந்த முறையை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது, ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி நடைமுறையைப் பின்பற்றி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறியுள்ள நீதிபதிகள், பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுபோல அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மீது விசாரணை நடத்தவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் காவலர்களை கண்டறிந்து சிறைப் பணிகளுக்கு மாற்ற வேண்டுமெனவும், உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை மூன்று வாரங்களில் செயல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!

ABOUT THE AUTHOR

...view details