தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதல் சுற்று தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் விளைவாக, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய வகையில் பேசி வருகின்றனர்.
பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் பரப்புரையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, இந்திய மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில், நாலாம் தர பேச்சாளரைப் போல பேசியிருப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது.
இதற்காக தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக, அவரது மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரது வேட்பு மனுவை தகுதி இழப்புச் செய்வதுடன், அவர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்றத் தொகுதியில், தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று வந்த போதும், அந்த தொகுதியில் கூட மக்களை நேரடியாகச் சந்திக்க அச்சம் கொண்டு, மோசமான தில்லு முல்லுகளை செய்து, எதிர்கட்சிகளின் வேட்பு மனுக்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கச் செய்து, பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி புரிந்தாலும், அவர்களால் எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம் என மக்களிடம் பெருமையாகக் கூறி வாக்கு கேட்க முடியாத நிலையில் தான் பாஜகவும், பிரதமர் மோடியும் உள்ளனர். 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில், தேர்தல் ஆணையம் பறக்கும் படை சோதனைகளை விலகிக் கொண்டதைப் போல, வாக்கு எண்ணிக்கை முடிய இன்னும் 45 நாட்கள் வரை இருப்பதால், பூட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலங்களைத் திறந்து, பொதுமக்களின் குறைகளை நிறைவேற்ற தடைகள் ஏற்படாத வகையில் செயலாற்றிட வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்கள் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது அவருடன் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ரிபாய், வெளிநாடு வாழ் மண்டலச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:வடமாநிலங்களில் ஸ்டாலின் பிரச்சாரமா? - செல்வப்பெருந்தகை கூறியது என்ன? - Lok Sabha Election 2024