டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் தறப்பு சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என பல்வேறு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்டார். ஆனால், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு பருவமழை பெய்யாததாலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்து வழங்கியதாலும் முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெல் சாகுபடி கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று (பிப்.03) மாலை 6 மணி முதல் 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரின் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும் என 22,774 ஏக்கர் சம்பா பயிர்கள் பாசன நீரைப் பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. முன்னதாக, சம்பா பயிர் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இரண்டு டிஎம்சி வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும் என்ற நிலையில், முதல் முறையாக பிப்ரவரி மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது. நீர் இருப்பு 33 டிஎம்சி ஆகும். அணைக்கான நீர்வரத்து 107 கன அடியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:74 வயதில் முனைவர் பட்டம்.. ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநரின் தமிழ் ஆர்வம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!