தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜனநாயகம் நீடிக்குமா'..? சர்வாதிகார போக்கில் பிரதமர் மோடி படுதோல்வி அடைவார் - வைகோ! - VAIKO ABOUT VIJAY

நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி 'ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல்' என்று எல்லாவற்றையும் புல்டோசர் வைத்து நசுக்குவதைப் போல செய்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார்.

வைகோ பேட்டி
வைகோ பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 4:21 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "2016 ஆம் ஆண்டு தேர்தல் பொதுக் கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாகவும், அதனை கேட்க வந்த காவல்துறையினரை மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி கேட்டபோது இல்லை என்ற பதிலை கூறியுள்ளேன். பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் காவல்துறை விதித்த விதியை மீறி ஒரு கூட்டத்தில் கூட நான் பேசியது இல்லை. இரவு 9.55க்கு முடித்து விடுவேன். அடுத்த மாதம் 5 ஆம் தேதி மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தொடர்ந்து அவரிடம், சீமான் - பிரபாகரன் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் குறித்த கேள்விக்கு, ''இதுகுறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கனவே இது குறித்து நிறைய பேசியுள்ளேன். இப்போது உள்ள பிரச்சனையில் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை'' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், '' நெருக்கடியான காலகட்டம் இது. ஜனநாயகம் நீடிக்குமா?. நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி 'ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல்' என்று எல்லாவற்றையும் புல்டோசர் வைத்து நசுக்குவதைப் போல செய்து வருகிறார்.

அம்பேத்கர் வழங்கிய அரசியல் அமைப்புக்கு விரோதமாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போது, காஷ்மீர் பிரச்சனையை கொள்கை அட்டவணையில் சேர்க்கவில்லை. அதேபோல் புது சிவில் சட்டத்தை சேர்க்கவில்லை. அப்போது நானும், முரசொலி மாறனும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு உள்ளோம்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ்மொழி - பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!

மோடி படுதோல்வி அடைவார்

தற்போது, காஷ்மீரை துண்டு, துண்டாக மாற்றி விட்டார்கள். புதிது புதிதாக ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல், ஒரே மொழி இந்தியும், சமஸ்கிருதம் மட்டும்தான் என அவர் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் சர்வாதிகாரத்தை நோக்கி தான் கொண்டு செல்கிறார். இதில் நரேந்திர மோடி படுதோல்வி அடைவார். இவர் ஹிட்லர் ஆகவோ, முசோலினி ஆகவோ, இடியமின் ஆகவோ முடியாது. அப்படிப்பட்ட நோக்கத்தோடு தான் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. அது நிச்சயமாக தோற்றுப் போகும்; மக்களிடம் விழிப்புணர்ச்சி உண்டாகும்.

இந்துத்துவாகாரர்கள், ஆர்எஸ்எஸ் காரர்களும் சேர்ந்து அலகாபாத்தில் ஒரு மாநாடு போட்டுள்ளனர். அதில், ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே தேர்தல் என்றும், இந்தியா என்று சொல்லக்கூடாது பாரத் என சொல்ல வேண்டும்; தலைநகர் டெல்லியில் இருந்து மாற்றப்பட்டு வாரணாசியில் கொண்டு செல்லப்படும். கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. முஸ்லிம்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இப்படி அந்த பிரகடனத்தை 32 பக்கத்தை வெளியிட்டுள்ளார்கள். அதுதான் அவரது உள்நோக்கம். ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த நாட்டின் கோடான கோடி மக்கள் ஜனநாயகத்தை 1976 நெருக்கடி காலத்தில் எப்படி பாதுகாத்தார்களோ அதுபோல பாதுகாப்பார்கள்'' என்றார்.

விஜய் பரந்தூர் விசிட்

தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்த கேள்விக்கு, இதைவிட அதிகமான படுகொலைகளும், கொள்ளைகளும் இதற்கு முந்தைய அரசு இருக்கும்போது நடந்துள்ளது. காவல்துறையினர் கண் விழிப்போடு இருந்து ஒவ்வொரு சம்பவத்திலும் 6 மணி நேரம் 7 மணி நேரத்திற்கு உள்ளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். மேலும், காவல்துறை வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது'' என கூறினார்.

தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு, விஜயின் விருப்பம்.. அவர் அனுமதி கேட்டுள்ளார் அதற்கு அனுமதி அளித்துள்ளனர் என்றார்.

மத்திய, மாநில அரசு நிதி பிரச்சனை குறித்த கேள்விக்கு, '' மத்திய அரசு, மாநில அரசான ஸ்டாலின் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் திட்டமிட்டு கால தாமதம் செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details