மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை, மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். தமிழகத்தின் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜல்லிகட்டு போன்று எல்கை பந்தயங்களும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காணும் பொங்கல் தினமான நேற்று (ஜன.15) 45ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் அங்கமாக திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை 10 கிலோ மீட்டர் குதிரை, மாடு வண்டிகளுக்கான எல்கை (ரேக்ளா) பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் தங்களது மாடு மற்றும் குதிரை வண்டிகளுடன் கலந்து கொண்டனர்.
இதில் முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு என மூன்று பிரிவுகளாகவும், குதிரை வண்டிகளுக்கான போட்டியில் கரிச்சான் குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை ஆகிய மூன்று பிரிவுகளாகவும் மாலை வரை எல்கை பந்தயம் நடைபெற்றது.