கோயம்புத்தூர்: கோவை மாவட்ட வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சி, நேற்று (பிப்.9) நடைபெற்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பை தொடங்கி வைத்து, யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் இரவு ரோந்து செல்லும் வன ஊழியர்களுக்கு டார்ச் லைட் முதல் உதவி பெட்டிகள் ஆகியவற்றை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், "நாட்டிலேயே முதன் முறையாக, கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. கோவை வனக்கோட்டம் சுமார் 693.48 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. கேரள மாநிலம் மற்றும் ஈரோடு, நீலகிரி மாவட்ட வன எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
கோவை மாவட்டத்தில் மனித - யானை மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு அதிகரித்து வரும் குடியிருப்புப் பகுதிகள், நிலப்பயன்பாட்டு முறை, விவசாய நடைமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. வனத்தை விட்டு வெளியேறும் யானைகளைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளைக் கவனிக்கும் யானைகள், அதிபுத்திசாலித்தனமாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.
கோவை மாவட்டத்தில் 2021 முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில், 9 ஆயிரத்து 28 முறை யானைகள் வழி தவறி வெளியேறி உள்ளன. இப்படி வெளியேறும் யானைகள், மதுக்கரை வனச்சரக பகுதியில் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. எனவே, ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து கேரளம் செல்லும் ரயில் வழித்தடம், வனப்பகுதியைக் கொண்டது. இந்த புதிய தொழில்நுட்பத்தில், மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கி.மீ தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் தண்டவாளப் பகுதியில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம், உயர் ரக கேமராக்களைக் கொண்டு தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் தெர்மல் இமேஜ் மற்றும் பகல் நேரத்தில் கேமரா வீடியோ பதிவுகள் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது. அதாவது, 150 மீட்டரில் ஆரஞ்சு நிற சிக்னல்கள், 100 மீட்டரில் மஞ்சள், 50 மீட்டரில் சிவப்பு நிற எச்சரிக்கை சிக்னல்கள் பெறப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்து வனத்துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.