சேலம்:பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். 1.85 மீட்டர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மாரியப்பன் தங்கவேலுவின் தாய் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) முன்னதாக, 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூன்றாவது முறையாக பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தனது மகனை நினைத்து பெருமை கொள்கிறார் மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா. இது குறித்து அவர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "முதலில் தங்கப் பதக்கமும், இரண்டாவது வெள்ளியும், தற்பொழுது வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இதுக்கு மேலே தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி பெற்று ஊருக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்.
தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தங்கம் கிடைக்கவில்லை என்பதில் சிறிது வருத்தம் இருந்தாலும், தற்பொழுது வெண்கலப் பதக்கம் வென்றது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு அளித்துள்ளது. இன்று காலை மாரியப்பன் என்னிடம் பேசிய பொழுது சிறிது வருத்தப்பட்டார். எதிர்வரும் காலங்களில் மீண்டும் தங்க பதக்கம் வென்று விடலாம் என்று தெரிவித்தேன். மாரியப்பன் தங்கவேலு எப்போது இந்தியா வருவார் என தெரியவில்லை அவர் வருகைக்காக காத்திருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி? - Thulasimathi Murugesan