திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்தி வரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் வருகிற 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளதால், கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கோரிக்கை:வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் தொழிலாளர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறங்க நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்துள்ள தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதியிலே வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும், தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது 5 ஏக்கர் நிலம் தந்து அதில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.
நீதிமன்றம் உத்தரவு:மாஞ்சோலை மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசு அதிகாரிகள் நேரடியாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சென்று தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும்படி தெரிவித்துள்ளனர்.
சிறப்பு முகாம்:அதன்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய மணிமுத்தாறு பேரூராட்சியில், தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் மனு பெறுவதற்காக, அதிகாரிகள் சார்பில் 3 நாட்கள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், வட்டார வழங்கல் அதிகாரிகள், சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை அதிகாரிகள், வனத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகாம் புறக்கணிப்பு: ஆனால், முதல் நாள் முகாமில் தேயிலை தோட்ட தொழிலாளர் ஒருவர் கூட பங்கு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணிமுத்தாறில் இருந்து தேயிலை தோட்டப் பகுதிகள் சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்திருப்பதால் தொழிலாளர்கள் கீழே வருவதில் சிரமம் உள்ளது. எனவே, அதிகாரிகள் தேயிலை தோட்ட பகுதியில் முகாம் அமைப்பார்கள் என்பது தொழிலாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. 40 கிமீ தொலைவில் முகாம் அமைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் முதல் நாள் முகாமை புறக்கணித்திருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க:மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற கிருஷ்ணசாமி.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த புதிய தமிழகம் கட்சியினர்!