திருநெல்வேலி: "பசுமை நிறைந்த நினைவுகளே...நாம் பிரிந்து செல்கின்றோம்" என தழுதழுத்த குரலில் 95 ஆண்டுகால வாழ்க்கைக்கும், ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வந்த இடத்திற்கும் பிரியாவிடை கொடுக்கின்றனர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி உற்பத்தியாகும் இடம், கண்ணை கவரும் அணைகள் என பல்வேறு பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒரு பொக்கிஷம் தான் மாஞ்சோலை வனப்பகுதி.
பிபிடிசி வசத்தில் இருந்த மாஞ்சோலை: பிபிடிசி மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் 3500 அடி உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்த வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தார் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது மும்பையை சேர்ந்த தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் எனப்படும் பிபிடிசி (BBTC) தனியார் நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை எஸ்டேட் அமைக்க திட்டமிட்டது.
இதற்காக அந்நிறுவனம் சிங்கம்பட்டி ஜமீனை அனுகியது. இதையடுத்து கடந்த 1929ம் ஆண்டு முதல் 2028 வரை 99 ஆண்டுகள் சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சோலை வனப்பகுதியை பிபிடிசி நிறுவனத்துக்கு ஜமீன் குத்தகைக்கு கொடுத்தார். இதையடுத்து கரடுமுரடாக இருந்த மாஞ்சோலை மலைப்பகுதியை சீராக்கி அங்கு பிபிடிசி நிறுவனம் தேயிலை பயிர்களை பயிரிட்டது. மாஞ்சோலை மட்டுமில்லாமல் அதற்கு மேல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி என மொத்தம் ஐந்து இடங்களில் தேயிலை எஸ்டேட் அமைத்தது.
மேலும் எஸ்டேட் வேலைக்காக கேரளா, திருநெல்வேலி, மானூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு அங்கேயே குடியிருப்புகளையும் பிபிடிசி நிர்வாகம் கட்டி கொடுத்தது. மாஞ்சோலையில் ஆண்டுக்கு ஆறு மாதம் மழைப்பொழியும் மீதம் ஆறு மாதம் மிதமான வெயில் பதிவாகும். ஆனால், ஆண்டு முழுவதும் இங்கு குளிர் காணப்படும்.
இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைப்பகுதியாகவும் பனிப்பொழியும் இயற்கை சூழலுக்கு நடுவே அமைந்துள்ள மலைப்பகுதியாக இருப்பதால் தொழிலாளர்கள் எஸ்டேட் வேலையை நேசிக்க தொடங்கினர். இதனால் மாஞ்சோலையை விட்டு பிரிய மனமில்லாத தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினரையும் இங்கேயே வேலைக்கு அமர்த்தினர்.
தற்போது நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் கூலியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைவான சம்பளம் என்றாலும் சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை என்பதால் மனநிறைவோடு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். சுமார் ஐந்து தலைமுறைகளாக தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வேலை பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் 3000க்கு மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் தற்போது 536 பேர் மட்டுமே எஸ்டேட்டில் பணிபுரிகின்றனர்.
முடிவுக்கு வரும் 95 ஆண்டு கால சகாப்தம்:இந்நிலையில் தான் தொழிலாளர்கள் தலையில் இடி விழுந்தாற்போல ஜமீனுடன் பிபிடிசி நிறுவனம் போட்டுகொண்ட குத்தகை காலம் முடியும் தருணம் நெருங்கியது. சுதந்திரத்துக்கு பிறகு ஜமீன் நில ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதால் மாஞ்சோலை பகுதி அரசு வசம் செல்லும் சூழல் உருவானது. எனவே முன்கூட்டியே நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்ற நிலையில் பிபிடிசி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர்.
இதையடுத்து குத்தகை காலம் முடியும் வரை பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தை நடத்தவும், 2028ல் முறைப்படி அரசு நிலத்தை கையகப்படுத்தி கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மாஞ்சோலை உள்ளதால் அதை காப்புக்காடாக அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்கள் ஓடிய நிலையில் குத்தகை காலம் முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தும் முன்கூட்டியே எஸ்டேட் தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பூர்வீகத்தை விட்டுச்செல்லும் நிலை: அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கியது. சுமார் 100 ஆண்டுகளாக வாழ்ந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு கண்ணீரோடு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் நெஞ்சில் நீங்காத மலைப்பகுதி என்பதால் தொடர்ந்து இங்கேயே இருக்க எப்படியாவது ஒரு வழிப்பிறக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு இந்த எஸ்டேட்டை ஏற்று நடத்தினால் தொடர்ந்து இங்கு வாழலாம் என்பது தொழிலாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது. ஏனென்றால், மாஞ்சோலையை காப்புக்காடாக (Reserve Forest) நீதிமன்றம் அறிவித்ததன் மூலம் தமிழக அரசு நேரடியாக எஸ்டேட்டை ஏற்று நடத்துவதில் சட்ட சிக்கல் உள்ளது.
எனவே தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான பணபலங்கள் உட்பட அனைத்து தேவைகளையும் வழங்கி அவர்களை கீழே வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிபிடிசி நிர்வாகம் செய்து வருகிறது.