தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் குடியிருப்பில் மட்டுமே திருடும் கொள்ளையன்.. விளாத்திகுளம் போலீசாரிடம் சிக்கியது எப்படி? - jewellery theft in police quarters

Thief stole Jewellery in police quarters arrested: விளாத்திகுளம் அருகே காவலர் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் லாவகமாக தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

உமாபதியை கைது செய்த காவலர்கள்
உமாபதியை கைது செய்த காவலர்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 6:58 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் விளாத்திகுளம் சட்டம், ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த காவல் நிலையங்களுக்கு பின்புறம் காவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவலர்கள் குடியிருப்பில் 4வது மாடியில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் செந்தில் முருகன் வசித்து வருகிறார். காவலர் செந்தில் முருகன், தனது மனைவி முத்துவுடன் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தங்களது சொந்த ஊரான மேல கல்லூரணியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொள்ளச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், 17ஆம் தேதி காலையில் அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் முத்து காமாட்சி என்பவர் பணிக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வரும்போது, காவலர் செந்தில் முருகன் வீட்டு கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, செந்தில் முருகனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவலர் செந்தில் முருகன் குடியிருப்புக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைத்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், பீரோவின் உள்புற லாக்கரை உடைத்து, அங்கிருந்த தங்கச் செயின்கள், மோதிரம், கம்மல், வளையல், பிரேஸ்லெட் என பத்து சவரன் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அதேபோல், காவலர் குடியிருப்பின் 3வது மாடியில் வசித்து வரும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கிருபா என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு தங்க நகைகளும், பணமும் இல்லாததால் கொள்ளையன் வெறும் கையுடன் சென்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக காவலர் செந்தில் முருகனின் மனைவி முத்து அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்தார். தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த சந்தேகத்திற்குரிய நபர், விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர்.

அந்த ஜிபே எண் மூலம் துப்பு துலக்கியதில், ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாபதி (32) என்பது தெரிய வந்தது. அவரை தேடிச் சென்றபோது, சாயல்குடியில் ஒரு சலூன் கடையில் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சாயல்குடிக்குச் சென்ற விளாத்திகுளம் தனிப்படை போலீசார், அங்கு சலூன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உமாபதியை கைது செய்து, விளாத்திகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குடியிருப்பில் தொடங்கி, வரிசையாக தேவிப்பட்டினம், திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய ஊர்களில் காவலர் குடியிருப்புகளை குறி வைத்து மட்டுமே தொடர்ந்து கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 16ஆம் தேதி விளாத்திகுளத்துக்கு வந்த உமாபதி, பகலில் காவலர் குடியிருப்பை நோட்டமிட்டு உள்ளார். இரவு நேரத்தில் காவலர்கள் செந்தில் முருகன் மற்றும் கிருபா ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மேலும், கைதான உமாபதியை கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2 நீதிபதி பீட்டர் முன்பு ஆஜர்ப்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் போலீசார் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஃபார்முலா 4 கார் பந்தயம்.. இரவே தெரியாமல் மாறும் சென்னை.. என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details