வேலூர்: தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் (Cotton Gambling) வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. காட்டன் சூதாட்டம் என்பது, உதாரணமாக, 1 ரூபாய் கட்டினால் 70 ரூபாய் தரப்படும் என்றும், 70 ரூபாய் கட்டினால் 700 ரூபாய் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, கூலி வேலைக்குச் செல்லும் மக்களை லாட்டரி வலையில் விழ வைத்து, அதன் மூலம் லட்சக்கணக்கில் சிலர் பணம் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் அடுத்த லத்தேரி காமராஜ்புரம் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடத்திய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இதுபோல நூற்றுக்கணக்கான முகவர்கள் இருப்பதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் புரளுவதாகவும், இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட காவல் நிர்வாகம், இடைத்தரகர்களை மட்டும் கைது செய்துவிட்டு சூதாட்டம் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கமல் தயக்கம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியில் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடைபெறுவதாகவும், இந்த சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு சூதாட்டத்தில் பணத்தை இழந்து வருகின்றனர் எனவும், அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், தன்னிடம் பணம் கட்டினால் ஒன்றுக்கு நூறு மடங்காக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.