தூத்துக்குடி: ஸ்மார்ட் போன், இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவுக்கு சைபர் க்ரைம் மோசடிகளும் பெருகியுள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மூலமாக பண மோசடியில் ஏமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், முகநூலில் வெளிநாட்டைச் சேர்ந்தவராக காட்டிக்கொண்டு பழகும் பலர் கிப்ட் அனுப்பவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் தந்திரத்தை கையாள்கிறார்கள். அந்த வரிசையில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் 38 லட்சம் ரூபாயை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் பேஸ்புக்கில் Nicholas Andrewis Morris என்ற பெயருடைய அடையாளம் தெரியாத மர்ம நபருடன் அறிமுகமாகி இருவரும் சேட்டிங் செய்து வந்துள்ளனர். நாளடைவில் இருவரும் நன்றாக பழகவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த நபர் தூத்துக்குடி பெண்ணுக்கு கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஒருநாள் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி அந்த பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், '' உங்களுக்கு 70,000- Pounds பணம், நகை மற்றும் ஐ போன் ஆகியவை பார்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பார்சலை பெறுவதற்கு பிராசசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிடவைகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் 38,19,300 ரூபாய் வரை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார்.