தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில், ரஞ்சிதா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் ரஞ்சிதாவும், அவருடைய தாயார் சாந்தி என்பவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.