சென்னை:சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், 2022ஆம் ஆண்டு இளம் பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் கடும் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. தற்போது, இந்த கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட உடன் கைது செய்யப்பட்ட சதீஷுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேர்தல் விதிகளில் திருத்தம்...உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை வரும் டிசம்பர் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.