சென்னை: மகாவிஷ்ணு என்பவர் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார். அது கடும் சர்ச்சையை கிளப்பியது.
அதனைத் தாெடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, மகாவிஷ்ணு பள்ளியில் சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்தது யார் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:மகாவிஷ்ணு வங்கி கணக்கிற்கு பணம் வரவு - அமைச்சர் ரகுபதி கூறிய அதிரடி பதில்
அதன் அடிப்படையில் கடந்த செப்.6ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளியில் விசாரணையை தொடங்கினார். ஆனால் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி யார் அனுமதி கொடுத்தார் என்பதை கூறுவதில் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தொடர்ந்து விசாரணை நடத்தி, அதன் மீதான தனது அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதியிடம் அளித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை, அசோக் நகர் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே பள்ளியில் மகாவிஷ்ணு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக முதன்மை செயலாளரிடம் தமிழரசி விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிக்ள நல அமைப்பு காவல் துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பள்ளிகளில் தனியார் அமைப்புகளை சார்ந்தவர்கள் அனுமதிக்க யாரிடம் அனுமதி பெற வேண்டும்? யார் யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும்? உள்ளிட்ட வழிமுறைகளை வகுப்பது குறித்தும் அரசின் வழிமுறைகளை மீறி செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி, துறை இயக்குநர்களஉடன் ஆலோசனை மேற்கொண்டார்.