சென்னை:சென்னை அடுத்துள்ள மதுரவாயலில் அமைந்துள்ளது 24 மணி நேர செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடத்தை நாகராஜன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து அங்கு மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடன் இணைந்து அரவிந்த் என்பவர் இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அரவிந்து இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரவிந்தின் மனைவி நிவேதனா அரவிந்துக்கு பதிலாக அங்கு சென்று இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
உரிமை கோரும் இருதரப்பு?இந்நிலையில் மருத்துவர் நாகராஜன் மற்றும் நிவேதனா இரு தரப்பிற்கும் இடையே யார் மருத்துவமனையை நிர்வாகம் செய்வது என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிவேதனா கூறுகையில்,"கடந்த 10 ஆண்டுகளாக நாகராஜன் மருத்துவமனைக்கு வரவே இல்லை என்றும் அனைத்தையும் உருவாக்கியது தனது கணவர் அரவிந்த் தான். அத்துடன் கணவர் இறந்த பிறகு கடந்த ஏழு மாதங்களாக தான் அந்த பொறுப்பை எடுத்து நடத்தி வந்ததாகவும் தற்போது திடீரென தன்னை வெளியேறும்படி நாகராஜன் வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். இது தொடர்பாக புகார் அளிக்க வந்த தன்னை நாகராஜன் தரப்பிற்கு ஆதரவாக போலீசார் தகாத முறையில் பேசி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறக்க அனுமதிக்கக் கூடாது எனவும் தன்னை அவமரியாதையாக பேசிய போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நிவேதனா கோரிக்கை வைத்துள்ளார்.