மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மைக் காலமாக போதுமான நிதி வசதியின்றி தள்ளாடி வருகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குபென்சன் பணம் வழங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் பேராசிரியர்கள், அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள்கூட ஓரளவுக்கு தாக்குப்பிடித்தாலும், அடிமட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களும், அவர்தம் குடும்பங்களும் கடுமையான வறுமைப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கோரிக்கை:கடந்த நவம்பர் 25-ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அதன் தலைவரும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையருமான சுந்தரவல்லி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஓய்வூதியர்களோடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சுந்தரவல்லியைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இருப்பினும் இன்றளவும் இவர்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
ஓய்வூதியம் குறைக்கப்பட்டது:இது குறித்து பல்கலைக்கழகத்தில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்பெஷல் கிரேடு அட்டெண்டர் வீரய்யா கூறுகையில், "ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.21 ஆயிரம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அதில் ரூ.5 ஆயிரத்தைக் குறைத்து தற்போது ரூ.16 ஆயிரம் தருகிறார்கள்.
அதிலும் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த மாதம் வரை ஓய்வூதியம் வரவில்லை. இந்தப் பணத்தை நம்பித்தான் எனது குடும்பத்தில் எனது மனைவி, மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது ஊதியம் வராத நிலையில் வட்டிக்குக் கடன் பெற்று வாழ்கிறோம். வேறு வருமானம் எதுவும் கிடையாது. ரத்தக்கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
குடும்ப ஓய்வூதியம் பெறும் அன்புச்செல்வி கூறுகையில், "எனது கணவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது கடந்த 1995-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதிலிருந்து எங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி எனது குடும்பத்தில் 8 பேர் உள்ளனர். எனது மருத்துவ செலவுக்கே இந்தத் தொகை போதவில்லை.
ஆகையால் இந்தத் தொகையையும் மாதாமாதம் வழங்க முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட வேண்டும். பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டத்தால் நிறைய பேர் பயனடைந்து வருகின்றனர். அதுபோன்று எங்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்க வழி செய்ய வேண்டும்" என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.