மதுரை:ரஜினிகாந்த் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய பொது நல மனுவை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மதுரை உலகநேரியைச் சேர்ந்த பழனிவேலு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், '' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, வேட்டையன் படத்திற்கான டீசர், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது.
அதில் சட்டவிரோத என்கவுண்டரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையில் என்கவுண்டர் தொடர்பான வசனம் இடம் பெற்றுள்ளது. இதனை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது mute செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:திருப்பத்தூர் தாய்-சேய் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் பணியிடம் மாற்றம்!
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் , மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை முழுவதையும் பார்த்த பிறகு, என்கவுண்டரை நியாயப்படுத்துவதாக படம் அமையவில்லை என கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
கடந்த மாதம் வேட்டையன் படத்தில் கோவில்பட்டி, காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியைவும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படம் ஓடும் லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், 'புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்