மதுரை: மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு உரிய இடம் இல்லாத காரணத்தால், ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் 3 ஆண்டு இளநிலை படிப்புக்கு 80 இடங்கள், 5 ஆண்டு படிப்புக்கு 80 இடங்கள், முதுநிலை படிப்புக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்தச் சூழலில், ராமநாதபுரம் கூத்தகோட்டை பகுதியில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. புதிய அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தில் குடிநீர் வசதி இல்லாததால் திறக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.
இது ஏற்புடையதல்ல. எனவே, புதிய கட்டடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.