தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்கள் பயன்படுத்தும் நீர்த்தொட்டி பராமரிப்பில் அலட்சியமா?" - மாட்டுச்சாணம் கலந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி! - Dung in water tank - DUNG IN WATER TANK

Dung in water tank: புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அரசுத் தரப்பில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் புகைப்படம்
மதுரை உயர்நீதிமன்றம் புகைப்படம் (credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:23 AM IST

மதுரை:புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரும், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரும் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்காக அனுப்பினர்.

அப்போது, அவர்கள் வழக்கை முறையாக விசாரிப்பதாக தெரியவில்லை. புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொழிஞ்சிஅம்மன் மஹால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

எனவே, புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இரட்டை குவளை முறை பயன்பாட்டைத் தடுப்பதோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்ட திருமண மண்டபங்களைப் பயன்படுத்தவும், வைராண்டி கண்மாயில் குளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "சங்கம்விடுதி கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனேயே வாழ்ந்து வருகின்றனர். சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் சாணம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பாசியே அதுபோல காணப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிகள் இவ்வாறு தான் பராமரிக்கப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சர்ச்சை கருத்து: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா ராஜினாமா!

ABOUT THE AUTHOR

...view details