மதுரை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அனியப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அனியப்பூர்
கிராமத்தில் உள்ள குருணி கருப்பசாமி கோயில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
அந்த வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, திருவிழாவிற்காக கிராமத்தில் உள்ள அனைவரிடமும் தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றது. எங்கள் குடும்பத்தில் மட்டும் திருவிழா நடத்துபவர்கள் தலைக்கட்டு வரி வசூலிக்கவில்லை. அதற்கான எந்த காரணமும் எங்களிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, எங்களையும் கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, கோயில் திருவிழாவில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த மனு மீது அரசு அதிகாரிகள் ஏன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரரின் மனு மீது உரிய விசாரணை செய்து, அவர்களிடம் தலைக்கட்டு வரி பெற்று, கோயில் திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை... சூடான தேர்தல் களம்! மதுரையில் வெற்றி யாருக்கு? - Lok Sabha Election 2024