மதுரை:பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? உரிய மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து திருநெல்வேலி சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர், சிறை துறைக்கு முன்கூட்டி தகவல் குடுக்காமல் சென்று திடீர் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த முகமது தாரிக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது சகோதரர் ஆசிக், வழக்கு ஒன்றில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக நாங்கள் பாளையங்கோட்டை சிறை சென்று பார்த்தோம். அப்பொழுது எனது சகோதரர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்
பாளையங்கோட்டை சிறையில் முறையான உணவுகள் வழங்குவதில்லை. மருத்துவர் அவசரத்திற்கு சிகிச்சை செய்ய மருத்துவர் கிடையாது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே கைதிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ அறைகள் தற்போது கைதிகள் தங்க வைக்கும் அறையாக மாறிவிட்டது. மேலும், அரசு அறிவித்துள்ளபடி, சிறையில் உணவு, பால், முட்டைகள் வழங்குவதில்லை.
அரிசிகள் மிகவும் குறைத்தும், காய்கறிகள் வேகாமலும், கைதிகளுக்கு தரம் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சிறை கைதிகளுக்கு உரிய சத்தான உணவுகளை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.