மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 110 நபர்களுக்கு இலவச வீட்டு மனை அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டது. அரசு விதிகளுக்கு எதிராக தகுதியற்ற நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியைச் சேர்ந்த நடுக்காட்டான் என்பவருக்கும், அவரது மகன், அவரது மனைவி அவரது உறவினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்களுக்கும் அரசின் இலவச வீட்டுமனை பட்டா வாங்கியுள்ளார். மேலும், ஒரே நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அதிகமானவர்களுக்கு முறைகேடாக இந்த அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
சகிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அண்டை கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அனுமந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடக் கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்கள், அரசின் இத்திட்டத்தில் பயன்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முறைகேடாக அனுமந்த பட்டாக்களை வழங்கி உள்ளனர். தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமந்த பட்டாவை ரத்து செய்து தகுதியுள்ள நபர்களுக்கு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.