மதுரை: திருச்சி உய்ய கொண்டான் திருமலையைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நான் நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்து வருகிறேன். முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி குறித்து தேர்தல் கூட்டத்தில் பேசும்போது அவதூறான கருத்துக்களையும், பட்டியல் இன மக்களுக்கு எதிரான (SC/ ST) கருத்துக்களையும் தெரிவித்ததாக என் மீது திருச்சி மாவட்ட காவல்துறை வன்கொடுமைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கிழமை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற வேண்டும் என்பதால், கீழமை நீதிமன்றத்தில் எனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், “பட்டியல் இனத்தவருக்கு எதிராக பொது மேடையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் இதேபோல் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார்.
ஏற்கனவே இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீன் பெறும்போது, இதுபோன்று அவதூறான கருத்துக்களை பேச மாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத பத்திரம் வழங்கி ஜாமீன் பெற்றுள்ளார். தற்போது உத்தரவாதப் பத்திரத்தை மீறி தொடர்ந்து பொதுவெளிகளிலும், பொது மேடைகளிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர் ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.