சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், 'போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. மேலும் வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளிவைக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.
மேலும், 'நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.