சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் குற்றச்சாட்டு பதிவுகள் முடிந்துவிடும் என்பதால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்து பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கிடையில், நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஜாமீன் மனு மீது விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என முறையீடு செய்தார். இதையடுத்து, முறையீட்டை ஏற்ற நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:"எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழல்" - ஓபிஎஸ் கடும் விமர்சனம்