சென்னை:கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர் பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட எட்டு பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே. முத்துராமலிங்கம் ஆஜராகி சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், வேறொரு இடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார் என்றும், சம்பவத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்