சென்னை:கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக் கோரி திமுக-வைச் சேர்ந்த வி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் வகையில், அதிமுக-வைச் சேர்ந்த வி.யு.மருதாச்சலம் என்பவர், சிலையை அமைத்து இருப்பதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மருதாசலம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், பேருந்து நிலையத்தின் இடத்தில் சிலை அமைக்கப்படவில்லை என்றும், வண்டி பாதை புறம்போக்கு இடத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஜெயலலிதா மட்டுமல்லாமல், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசு தரப்பில், பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலைகளை அகற்றும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே வண்டி புறம்போக்கு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளில் குறிப்பிட்டவற்றை மட்டும் அகற்றாமல், அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணல்!