சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவருக்கு, கருணை அடிப்படையில் 8 வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு பணி வழங்காத திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோமதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு வேலை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் வேலை வழங்கப்படவில்லை எனக் கூறினார்.
எனவே, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வாதிட்டார். இதனையடுத்து, மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தகுதி பெற்ற 198 பேருக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - TNPSC Group 1 Update