தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அத மட்டும் பேசக்கூடாது”.. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! - SP Velumani cases - SP VELUMANI CASES

Case against SP Velumani: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கோவை திமுக நிர்வாகி ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (Credits - SP Velumani 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 5:06 PM IST

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில், ரயிலில் கர்ப்பிணியிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி, கோவை திமுக நிர்வாகி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிரந்தர தடை விதிக்கக் வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ரயிலில் நடந்த சம்பவம் குறித்து இரு நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது எனத் தெரிவித்துள்ள மனுதாரர், அந்த நாளிதழ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எதிர்மனுதாரர் வேலுமணி மீது மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, மான நஷ்டஈடு கோர மனுதாரருக்கு உரிமையில்லை என உத்தரவிட்டார்.

மேலும், எதிர்மனுதாரர் வேலுமணி கூட்டத்தில் பேசியதை மனுதாரர் ராஜேந்திரன் நேரில் கேட்கவில்லை. இந்த தகவலை தன்னிடம் தெரிவித்த நண்பர்கள், உறவினர்களை சாட்சியாக விசாரிக்கவில்லை என்பதால் நிவாரணம் கோர முடியாது எனவும், பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து மட்டும் எதிர்காலத்தில் பேசக்கூடாது என வேலுமணிக்கு நிரந்தர தடை விதித்த நீதிபதி, மனுதாரரின் மற்ற நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்பது அர்த்தம் அல்ல எனவும், பொது வாழ்வில் உள்ள எதிர்மனுதாரர் வேலுமணி, மற்ற விவகாரங்கள் குறித்து பேச உரிமை உள்ளது என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், நிரந்தர தடை தவிர, மான நஷ்ட ஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலை தான் காரணம்.. எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details