தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்! - TN GOVT ONLINE GAMES RESTRICTIONS

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 5:19 PM IST

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான ஏராளமான இளைஞர்கள், பணத்தை இழந்து உயிர்களை மாய்த்துக் கொள்வதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்-லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கலாம் என 2023ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடும் போது, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு பணம் வைத்து மட்டுமே ஆட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் அந்த விதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், "அரசியல் சட்டம் வழங்கியுள்ள வர்த்தகம் செய்யும் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்பவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதியில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், எந்த காரணமும் இல்லாமல், அறிவியல்பூர்வமான புள்ளி விவரங்கள் சேகரிக்காமல், சம்மந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிகள் மத்திய அரசின் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது" என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

கிளப்களில் ரம்மி விளையாட எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், ஆன்லைனில் விளையாட தடை விதிப்பது பாரபட்சமானது. உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆதாரை அரசின் நலத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டாயப்படுத்த வேண்டுமே தவிர மற்றவற்றுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு விரோதமாக ஆன்லைன் விளையாட ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்ததால் தான் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததன் மூலம் மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகிறது. வயது, விளையாடும் நேரம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இதையும் படிங்க:அரசு துறைகளில் தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது - நீதிமன்றம் திட்டவட்டம்!

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தான் அதிகளவில் இளைஞர்கள் விளையாடுகிறார்கள் என நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details