தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாளம் தெரியாத பிணங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத பிணங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 4:13 PM IST

சென்னை:அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத பிணங்களை தகனம் செய்யக் கோரி, மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அரசு மருத்துவமனை பிணவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் நாளுக்கு நாள் அதிகளவில் தேங்கியுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் மட்டும் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத நிலையில் 100 உடல்கள் ஒரு மாதத்தில் தேங்கியுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதே நிலை உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. சில உடல் மருத்துவப் பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்வதாக கூறி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, உடல்களை அடக்கம் செய்ய சென்னை பகுதிகளில் போதிய இடமில்லாத நிலை உள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் உடலை அடக்கம் செய்ய முன் வந்தாலும், அதற்கான செலவு தொகையை அரசு வழங்காததால், ஒரே இடத்தில் பல உடல்களை புதைக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, அடையாளம் தெரியாத உரிமை கோரப்படாத உடல்களை, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி உடல்களில் உள்ள அடையாளம், சாட்சி, இறப்புச் சான்று, உடற்கூறு சான்று ஆகியவற்றைப் பெற்று தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குற்ற ஆவண காப்பகத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், உடல்களை புதைக்காமல் தகனம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் இதே நடைமுறையைப் பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் எட்வின் பிரபாகர் ஆஜராகி, வழக்கு தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:பெரியகுளத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக பத்திரப்பதிவு.. கணக்கில் வராத ரூ.87,500 பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details