சென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2014 முதல் 2017 வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து பணி நியமனத்துக்காக ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறையை மாற்றி, போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என கடந்த 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கக் கோரி 410 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.