தமிழ்நாடு

tamil nadu

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடை; காவல்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - madras high court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 5:18 PM IST

Madras High Court: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை தொடர்பான உத்தரவை தமிழகம் முழுவதும் இரு வாரங்களில் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டுமென, தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தாக்கல் செய்த அறிக்கையில், வாகனங்களில் தடை செய்யப்பட்ட "சன் கன்ட்ரோல் ஃபிலிம்" ஒட்டப்படுவதை தடுப்பதற்கும் அதனை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

அதே போன்று போக்குவரத்து விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 கோடியே 57 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த தடையை இரு வாரங்களில் அமல்படுத்தி, இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை ஏர்போர்ட் தங்கம் கடத்தல் விவகாரத்தில் அண்ணாமலைக்கு தொடர்பா? - செல்வப்பெருந்தகை பகீர் பேட்டி! - SELVAPERUNTHAGAI VS ANNAMALAI

ABOUT THE AUTHOR

...view details