சென்னை: ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், “பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது.
இந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது.
அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து வழங்க ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி பணத்தைச் செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், அந்தப் படத்தை வெளியிட தயாராக உள்ளது. எனவே, அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.