சென்னை:சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று (பிப்ரவரி 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருப்பதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யார் கண்காணிப்பார்? ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? ஆணையம் அமைப்பதற்குக் கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், எப்போது தேர்வு நடைமுறைகளை முடிக்கப் போகிறீர்கள்? தகுதியானார்களை நியமிக்க வேண்டும் எனக் கூறி, சமூக நலத் துறை செயலாளரைக் காணொலியில் ஆஜராக அறிவுறுத்தினர்.