சென்னை:சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி:இந்த வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பில், "அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ள 30 வழக்குகளில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதற்காகவும், அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியது போன்ற அரசியல் காரணமாக தொடரப்பட்ட வழக்குகள். இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான் நிலுவையில் உள்ளன. மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்க துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை:இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், "2,900 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரம், ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்களாக உள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது" என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பு:இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிப் 21ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று (பிப்.28) தீர்ப்பளித்த நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை செய்து 3 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு