சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, 'கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுவரை 3 முறை இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகி, இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சம்பவம் கடந்த 2022 இல் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், காவல் துறையினரால் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்ய முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.