சென்னை:பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பின்னர், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்திருந்தார்.