தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“உள்ளாட்சி அமைப்புகளின் ஊழலால் சென்னையே சிமெண்ட் கட்டிட காடாக மாறிவிட்டது” - சென்னை ஐகோர்ட் கருத்து! - Chennai city is concrete jungles

Madras High Court: உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்ட் கட்டிட காடாக மாறிவிட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 2:19 PM IST

சென்னை: நீலாங்கரை பகுதியில் தேவராஜி என்பவர் திட்ட அனுமதியை மீறி வீடு கட்டியுள்ளதாகவும், அந்த விதிமீறல் பகுதியை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வடிவேலு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், ‘இந்த விவகாரத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு இறுதியில் விதிமீறல் பகுதியை இடிக்க வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை கடந்த 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனாலும், இதுவரை இடிக்கவில்லை என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசாணையின் படி வீட்டில் உள்ள விதிமீறல் பகுதியை வீட்டின் உரிமையாளர் இடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற விதிமீறல் கட்டிடங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அண்டை வீடுகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் துறை அதிகாரிகளின் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால், தற்போது சென்னை மாநகரமே சிமெண்ட் கட்டிடங்கள் நிறைந்த காடாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினாலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தன் வீடு மட்டுமல்ல, தங்கள் பகுதியில் ஏராளமான வீடுகள் இதுபோல விதிமீறி கட்டப்பட்டுள்ளது என்று எதிர்மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

எனவே, இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை 2 மாதத்துக்குள் எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தில் தேவராஜி வழக்கு தொடர்ந்து தகுந்த உத்தரவைப் பெற உரிமை உள்ளது எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம் என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:'மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு தான் ரொம்ப முக்கியம்' - சென்னையில் டி.கே.சிவகுமார் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details