சென்னை: மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அப்படி என்ன சிரமம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அமலாக்கத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரியில் தேர்வு; அமைச்சர் மா.சு. தகவல்..!
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகததால் பொதுத் துறை செயலாளர் (நவ 29) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,பொதுத் துறை செயலாளர் நேரில் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு ஆதரவான வழக்குகள் என்றால் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வீர்கள். அரசுக்கு எதிரான வழக்குகள் என்றால் மேல்முறையீடு செய்து, விசாரணையை தாமதப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறீர்கள். இதே நடைமுறை தான் அனைத்து வழக்குகளிலும் செய்கிறீர்கள். மணல் கொள்ளை முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராவதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை அடுத்த வாரம் ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்