சென்னை: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக 4,500 ஏக்கர் நிலங்கள் இருந்ததாகவும், அதில் பெருமளவில் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயில் செயல்பாட்டைக் கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், கோயிலுக்கு அரசியல் கட்சி சாராத நபரை அறங்காவலராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோயில் ஆவணங்களின்படி, வரகுண பாண்டீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக 3,290 ஏக்கர் நிலங்களே உள்ளதாகவும், 707 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், கோயில் நிலத்தை விற்பனை செய்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அதிகாரியையும் காப்பாற்ற அரசு நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு! - vikravandi dmk candidate