கோயம்புத்தூர்:மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டு, தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது, திருப்பூர் ஏற்றுமதி கூட்டமைப்பினருடன் (Tiruppur Export Association ) மத்தியப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதன்படி, அம்மாநிலத்தின் ஜபல்பூரில் ஒருங்கிணைந்த மெகா டெக்ஸ்டைல் பார்க் (PM Mitra Integrated Mega Textile Park ) அமைக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மத்தியபிரதேசத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தொழிற் பூங்கா அமைக்கப்படும் நிலையில், இதற்கு உதுணையாக கோவையில் ஒரு தகவல் தொடர்பு அலுவலகத்தையும் திறக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இதில் கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங் (Engineering), ஆட்டோமொபைல்ஸ்(Automobiles), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதனையடுத்து, இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் பேசுகையில்,“ எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறினார். தொடர்ந்து, இயற்கை வளம், கனிம வளம், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் ஒற்றுமை உள்ளது. கோவையும், திருப்பூரும் ஜவுளித்துறையின் மையம் என கூறுவதற்கு காரணம் தொழில் துறையினரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்.
ஆசியாவில் முக்கிய ஜவுளி உற்பத்தி மையமாக திருப்பூர் உள்ளது. இதேபோல், ஆட்டோமொபைல், பொறியியல் மற்றும் பம்ப்(pump) உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம். ஜவுளி தொழிலுக்கு உகந்த சுற்றுச்சூழல் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழிலின் மூலப் பொருளாக விளங்கும் பருத்தி உற்பத்தி மத்திய பிரதேசத்தில் அதிகரித்திள்ளது.